ஆன்மீகம்
ஆன்மீகம் என்பது இறைவனைப் பற்றி அறியும் அறிவு. இதுவே ஆறாவது அறிவு. இன்றைய உலகில் இறைவனைப் பற்றி அறிய யாரும் முன்வருவதில்லை. ஆன்மீக அறிவைப் போதிக்கும் சமயங்கள்கூட ஒரே இறைவனைப் பற்றி போதிப்பதில் தவறி விடுகின்றன. மதங்களின் பெயரால் பல பிரிவினைகளும், சண்டைகளும் நிறைந்துள்ள சூழ்நிலையில் ஒன்றே குலம்! ஒருவனே தேவன் தேவன்! என வீர முழக்கமிட்டு ஒரு குடையின்கீழ் ஒன்றுசேர்த்தவர் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. இவரின் போதனைகளை எடுத்துரைப்பது மனுஜோதி – அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறோம்.
மனுஜோதி
வனாந்தரத்திலிருந்து அழைக்கும் சத்தம்
அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ்
2003 நவம்பர் – கதிர் 8
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
வேள்வி முதற்றே உலகு – திருவள்ளுவர்
பலி * யக்ஞம் * வேள்வியின் முக்கியத்துவம்
அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,
ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!
அநேகர் மனுஜோதி இதழைப் படித்து அதிக மகிழ்ச்சி அடைந்ததாகவும், மேலும் அரிய ஆன்மீகக் கருத்துக்களை அறிய ஆர்வமாயிருப்பதாகவும், கடந்த மனுஜோதி இதழில் சிறப்பிடம் பெற்றது. “மதமில்லா மனிதன்” என்ற தலைப்பில் வெளியான கருத்துக்கள் என்றும் அனைவரும் பாராட்டி எழுதியிருந்தனர். கடிதம் எழுதிய அனைவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அக்டோபர் மாதம் 3-ம் நாள் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் நடைபெற்ற நீதி (தர்ம)யுக ஸ்தாபக விழா மனுஜோதி ஆசிரமத்திலும் உலகமெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையங்களிலும் ஆதிபலி அன்புக்கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மனுஜோதி இதழை நீங்கள் படிப்பது மட்டுமல்ல, உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.
இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்!
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக! என வாழ்த்துகிறோம்.
வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!
இந்த இதழில் பலியின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பார்க்கலாம். பலியைக் குறித்து அநேகருக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் பலியைக் குறித்த முக்கிய கருத்துக்களை அறிந்துகொள்ளுங்கள்.
பலி என்றால் என்ன? கீதையிலும், விவிலியத்திலும் பலி என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. உயிர் பலி – உயிரினங்களைப் பலி செலுத்துவது. 2. தியாகம் – நம்முடைய வாழ்க்கையைப் பொது நலனுக்காக மக்களுக்காக அர்ப்பணிப்பது ஜீவபலியாகும். பலியிடுவதின் முக்கியக் காரணம் என்ன?
ஆதியிலே ஸ்ரீமந் நாராயணர் செலுத்திய ஆதிவேள்வியை நினைவுகூர்ந்து செய்யப்படுவதே பலியிடுவதின் முக்கியக் காரணமாகும்.
ஆதிமனிதன் வீழ்ச்சியடைந்தபோது இறைவனை அணுக, பலியானது ஒரு பரிகாரமாக செலுத்தப்பட்டு வந்தது. இதைக் குறித்து வேதங்களின் வாயிலாக ஆராய்ச்சி செய்யும்போது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பலியை செய்து வந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் உள்ள மக்கள், யூதர்கள் பலியிடும் வழக்கத்தைக் கைக்கொண்டு வந்திருக்கின்றனர். ஏறக்குறைய 1,500 ஆண்டுகளாக இஸ்லாமியர்களது பக்ரீத் திருநாளின்போது ஆட்டைப் பலியிட்டு ஆசரித்து வருகின்றனர். ஆனால் அரபு நாடுகளில் எந்த மிருகத்தைப் பலியிடுகிறார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது, பக்ரி – என்றால் ஆடு என்று பொருள். யூதர்கள் மோசேயின் காலமுதல் இயேசுவின் அவதார வருகைக்கு முன்பாக சுமார் 2,000 வருடங்களாக மோசேயினால் ஏற்படுத்தப்பட்ட ஆசரிப்புக்கூடார மாதிரியின்படி பலி செலுத்தி வந்தனர் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆதாம், ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், யாக்கோபு போன்ற மகான்கள் ஆட்டை பலி செலுத்தி கடவுளோடு நேரடியாகப் பேசினார்கள் என்று விவிலியத்தில் ஆதாரம் உள்ளது. இதை எந்தக் கிறிஸ்தவர்களும் மறுக்க முடியாது. அவர்கள் அதின் மாமிசத்தைப் புசிப்பதற்காக பலி செலுத்தவில்லை.
இந்த பலியின் முக்கியத்துவம் என்ன? இன்றைய மக்கள் பலியின் முக்கியத்துவத்தை உணராமல், உயிரினங்களைக் கொன்று மாமிசத்தைப் புசிக்கிறார்களே தவிர, வேறு எந்த பலனையும் அவர்கள் அடைவதில்லை. பறவைகளில் புறாவைத்தான் பலியிட்டதாக விவிலியம் கூறுகிறது. புறாக்கள் கிடைக்காததால் கோழியைப் பலியிடுகின்றனர். புறாக்கள் கபடமற்றவை – பித்தப்பை இல்லாத ஒரு பறவை. ஆதாம், ஏவாள் தவறு செய்தபோது அவர்கள் கடவுளோடு நேரடியாகப் பேசும் பாக்கியத்தை இழந்து போனார்கள். அப்பொழுது தம்மை அணுகுவதற்கு அவர்களுக்கு அவர் ஒரு வழிமுறையை சொல்லித் தந்தார். அவர்கள் தங்கள் தவறுகளை நினைத்து வருந்தி ஆதி யக்ஞத்தை நினைவு கூர்ந்து ஒரு உயிரை பலி கொடுப்பதின் மூலமாக தம்மை அணுக முடியும் என்று இறைவன் அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்தார். அந்த பலியின் மாமிசத்தைப் புசிக்கலாம். அந்த பலியின் மூலமாக அவன் இறைவனோடு ஒன்றுபடுகிறான். ஆயினும் இந்த மிருகங்களின் உயிரை பலியின் காரணத்திற்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அதனால்தான் கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளையையும் கொடுத்தார். அது மனிதர்களை மட்டுமல்ல, மிருகங்களையும் சேர்த்துதான்.
கிறிஸ்தவர்கள் மேற்கூறியவைகளை நன்கு அறிவார்கள். அவர்கள் அவதார புருஷர் இயேசு நம்முடைய பாவங்களுக்காகப் பலியானார் என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தார்கள். அது உண்மையா? அல்ல. ஏனெனில் ஈஸா நபி கொல்லப்படவில்லை என்று திருக்குர்-ஆனில், கூறப்பட்டுள்ளது. இந்த இருவரிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வரை விழிப்புணர்வும், மத நல்லிணக்கமும் ஏற்படாது. மேலோட்டமாக மதநல்லிணக்கம் என்கிற பெயரால் ஒன்று கூடுகிறார்களே ஒழிய வேதங்களின் அடிப்படையில் ஒன்றுபடுவதில்லை.
திருக்குர்-ஆனில் ஈஸா நபிக்குப் பதிலாக வேறொருவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருக்குர்-ஆன் – சூரா 4:157, 158:
“இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை, நிச்சயமாக நாங்கள் கொலைசெய்துவிட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்). அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற). ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. இன்னும் நிச்சயமாக இ(வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது. மேலும், உறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
மாறாக அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். இவர் யார் என்பதைக் குறித்து எந்த மதத்தினருக்கும் உறுதியாகத் தெரியாது. அவர் யார் என்பதை ஸ்ரீமந் நாராணயர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய சொற்பொழிவுகளில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். விரிவாக அறிய விரும்புவோர் எங்களோடு தொடர்பு கொண்டு JUDAS ISCARIOT THE FIRST MARTYR FOR JESUS GOSPEL என்ற ஆங்கில புஸ்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். சில பிரதிகளே எம்மிடம் உள்ளது.
சிலுவையில் நடந்த அந்த நரபலி காரணமாக அன்றைய ரோமானியப் பேரரசு ஆடு, மாடுகளையும், நரபலியையும்கூட பலி செலுத்தக்கூடாது என்று தடைவிதித்து, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. எருசலேமிலுள்ள யூதர்களின் தேவாலயமும் அழிக்கப்பட்டதால் அன்று முதல் இன்று வரை யூதர்கள் ஆடு, மாடு, புறா போன்றவைகளை பலியிடுவதை நிறுத்திவிட்டனர்.
ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் பலியிடும் வழக்கம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். யூதர்களின் வேதக் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. யூத மக்கள் சிதறடிக்கப்பட்டபோது அவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர். அவர்கள் எருசலேம் தேவாலயத்தின் அமைப்பின்படிதான் தென்னிந்தியாவில் தேவாலயங்களைக் கட்டினர். பலிக்கு மாதிரியாக நந்தியை வைத்தனர். கடந்த 5,000 வருடங்களாக பலியிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கும் இப்பொழுது தமிழ்நாட்டில் தடைச்சட்டம் வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலியிடுவது அவசியமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
இராமராஜ்யம் அதாவது தர்ம யுகம் தமிழ் நாட்டில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால் உதயமாகி உள்ளது. அதிவிரைவில் அதை உலக மக்கள் அறிந்துகொள்வார்கள். மதமாற்றத் தடைச்சட்டமும் கோவில்களில் ஆடு, மாடு பலி செலுத்தக் கூடாது என்ற தடைச்சட்டமும் தர்ம யுகத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.
பலியின் முக்கியத்துவத்தைக் குறித்து பரிசுத்த விவிலியத்திலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுகிறோம். அதையும் படித்து அறிந்து கொள்ளுங்கள். அந்நாட்களிலே மக்கள் பேய்களுக்கும் பலிசெலுத்தி வந்திருக்கின்றனர். இன்றைய மக்கள் யாருக்கு பலி செலுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பரிசுத்த விவிலியத்திலிருந்து சில குறிப்புகள்:
1 சாமுவேல் 15:22: “அதற்குச் சாமுவேல்: இறைவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் இறைவனுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.”
சங்கீதம் 4:5: “நீதியின் பலிகளைச் செலுத்தி. இறைவன்மேல் நம்பிக்கையாயிருங்கள்.”
சங்கீதம் 27:6: “இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதனிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, இறைவனைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.”
சங்கீதம் 40:6: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.”
சங்கீதம் 51: 16,17: வச. 16: “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.”
வசனம் 17: “இறைவனுக்கு ஏற்ற பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; இறைவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்ணியீர்.”
நீதிமொழிகள் 21:3; “பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே இறைவனுக்குப் பிரியம்.”
பிரசங்கி 5:1: “நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதைப்போலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.”
ஏசாயா 1:11: “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று இறைவன் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.”
எரேமியா 6:20: “சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப் பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்க தகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.”
மத்தேயு 9:13: “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.”
மத்தேயு 12:7: “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்.”
செப்பனியா 1:7,8: “இறைவனாகிய ஆண்டவனுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; இறைவனுடைய நாள் சமீபித்திருக்கிறது; இறைவன் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். இறைவனுடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.”
மல்கியா 1:8: “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல; காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் ஆண்டவர் கேட்கிறார்.”
மாற்கு 12:33: “முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.”
ரோமர் 12:1: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் இறைவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”
1 கொரிந்தியர் 8:4: “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி; உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு இறைவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.”
1 கொரிந்தியர் 10:18-20: “மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? இப்படியிருக்க விக்கிரகம் ஒரு பொருளென்றும் விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை இறைவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.”
எபேசியர் 5:2: “கிறிஸ்து நமக்காகத் தம்மை இறைவனுக்கு சுகந்தவாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.”
பிலிப்பியர் 2:17: “மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின் மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.”
எபிரெயர் 10:12: “இவரோ, பாவங்களுக்காக ஒரே (ஆதி) பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் இறைவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து…”
எபிரெயர் 10:26, 27: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடு எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபக்கினையுமே இருக்கும்.”
எபிரெயர் 11:4: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து இறைவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.”
எபிரெயர் 13:15,16: “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் இறைவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் இறைவன் பிரியமாயிருக்கிறார்.”
சங்கீதம் 106:37,38: “அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
சங்கீதம் 107:22: “ஸ்தோத்திரப்பலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.”
ஓசியா 8:13: “எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; இறைவன் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.”
ஆபகூக் 1:16: “ஆகையால் அவைகளினால் (பலிகளினால்) தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் (ஆயுதபூஜை) பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.”
பிரம்மயக்ஞம் * ஆதி(பலி)வேள்வி
உலகத்தின் சிருஷ்டிப்பின் சமயத்தில், தேவலோக மக்களின் நலனுக்காக, ஸ்ரீமந் நாராயணர் ஒரு வேள்வியை நடத்தினார் என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது.
அவர் அதை ஏன், எதற்காக நடத்தினார் என்ற இரகசியங்களெல்லாம் வேதங்களில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த பலி அல்லது யக்ஞத்தினுடைய காரணம் பொதுமக்களுக்குத் தெரியாது. பிராமணர்கள் இந்த பலியைக் குறித்த சத்தியத்தை மறைத்தார்கள். அதன் மூலமாக ஜனங்கள் இந்த இரகசியத்தைப் புரிந்துகொள்ளாதபடிக்கும், பிசாசு அல்லது கலியன் என்பவன் இருப்பதை மறைப்பதற்கும் இவ்வாறு செய்தார்கள்.
கிறிஸ்தவர்கள்கூட பிரம்ம யக்ஞம் அல்லது ஆதிபலியை மறைத்துவிட்டு, யூதர்கள் உண்டுபண்ணின தத்துவமாகிய ‘சிலுவையறைதலை’ அறிமுகம் செய்தார்கள். பரிசுத்த வேதாகமத்தில் “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று இந்த இரகசியமானது முத்திரிக்கப்பட்டுள்ளது. இயேசு சிலுவையில் மரித்து அவர்களுடைய கர்ம பாவத்தை (பாவங்கள்) எல்லாவற்றையும் நீக்கினார் என்ற உபதேசத்தை அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரம்ம யக்ஞத்தை அல்லது ஆதிபலியை ஜனங்கள் மறந்தபொழுது அந்த அழிவற்ற யோகத்தை அல்லது பிரம்ம யக்ஞத்தை நினைவுபடுத்துவதற்காக கடவுள் தீர்க்கதரிசிகளையும் அவதாரங்களையும் எழுப்பினார்.
பக்ரி-ஈத், என்பதை நிறுவினதின் மூலமாக இந்த பிரம்ம யக்ஞத்தின் இரகசியத்தைக் கொண்டு வருவதற்காக தீர்க்கதரிசியாகிய முகம்மது எழுப்பப்பட்டார். அதாவது ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்துவதின் மூலம், ஸ்ரீமந் நாராயணருடைய ஆவியை எவரும் தொட முடியும்.
தம்முடைய மக்களாகிய தேவலோக மக்களுக்கு தம்முடைய வல்லமையைக் காண்பிப்பதற்காக அல்லது நிரூபிப்பதற்காக ஸ்ரீமந் நாராயணர் அழிவற்ற யோகம், அல்லது ஆதிபலியை நடத்தினார். அவருக்கு அழிவு அல்லது மரணம் என்பது இல்லை. பிரம்ம யக்ஞம் நடத்தப்பட்டபொழுது கடவுளுடைய பிள்ளைகள் ஸ்ரீமந் நாராயணருடைய வல்லமையை, அமிர்தத்தை ஒரு வரமாகப் பெற்றார்கள். அது ஜீவன் முக்தி அல்லது நித்திய ஜீவன் என்று அழைக்கப்படுகிறது.
பகவத் கீதை 3:10-12: “சிருஷ்டிப்பின் ஆதியிலே ஸ்ரீமந் நாராயணர் ஒரு பலியை, யக்ஞத்தை செலுத்தினார். என்னுடைய பலியினால் வளர்ச்சியடையுங்கள் என்று அவருடைய சிருஷ்டிக்கப்பட்ட பிள்ளைகளிடம் கூறினார். என்னையே பலியாகத் தந்த இந்த யக்ஞமானது உங்களுக்கு விரும்பியதை அளிக்கட்டும். என்னுடைய பிள்ளைகளே, இந்த பலியின் மூலமாக, நீங்கள் அமிர்தமாகிய காமதேனுவை அனுபவியுங்கள்.
உங்களுடைய ‘சுயபலி’யின் மூலமாக மற்றவர்கள் இன்பத்தைப் பெறட்டும். ஒருவருக்கொருவரின் இன்பத்தினால் சிறந்த நன்மையை அல்லது ஜீவன் முக்தியை அடைவீர்கள்.
இந்த பலியின் மூலமாக கடவுளுடைய பிள்ளைகள் நீங்கள் கேளாமலேயே விரும்பின இன்பங்களை உங்களுக்குத் தருவார்கள். ஆனால் ஆதி யக்ஞத்தின் மூலமாகக் கிடைக்கப்பட்ட ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் எவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனாவான்.
பரிசுத்த வேதாகமம்: வெளிப்படுத்தல் 1:18 – “மரித்தேன், ஆனாலும், இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”
வெளிப்படுத்தல் 13:8 – “உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.”
1 கொரிந்தியர் 2:7 – “உலகத் தோற்றத்திற்கு முன்னே இறைவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம்.”
ரோமம் 12:1 – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் இறைவனுக்குப் பிரியமுள்ள ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே, நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”
1 தீமோத்தேயு 6:16 – “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக ஆமென்.”
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நித்திய ஜீவ வார்த்தைகள்:
ஸ்ரீமந் நாராயணருடைய பலி கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உலக அஸ்திபாரத்தின்போது சம்பவித்ததென்று ஆதிபலி மக்கள் விசுவாசிக்க வேண்டும். அதுதான் உலக அஸ்திபாரத்தின் முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருக்கிறது. அந்த சமயத்தில்தான் அவர் எல்லாவற்றையும் செய்தார். தம்முடைய ஜனங்களுக்காக அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அவர் எல்லாவற்றையும் முடித்தார். இப்பொழுது நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அவர் எல்லாவற்றையும் திட்டப்படியே செய்தார்.
அழியாத யோகம் அல்லது ஆதிபலி என்பது நிச்சயமாக நடந்த ஒரு சம்பவமாகும். வேதங்களிலும், பவிஷ்யபுராணத்திலும், விவிலியத்திலும், மற்ற வேதங்களிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பலி’ என்றால், கொல்வது என்று அர்த்தமல்ல. ‘நீங்கள் என்னைப் பலியிடுங்கள். அதனால் நீங்கள் விருத்தியடைவீர்கள்’ என்று அவர் சொன்னபொழுது, இவர்கள் அனைவரும் சுயமுள்ளவர்களாகிவிட்டனர். ‘நீங்கள் விருத்தியடைவீர்கள்’ என்று அவர் சொன்னபொழுது உடனே அவர்கள் : ‘அப்படியானால் நாங்கள் பலியிடுகிறோம்’ என்று சொன்னார்கள். அவர்கள் அவரை பலியிட்டார்கள். ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து ‘மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய எல்லாத் திறவுகோல்களும் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று நிரூபித்தார்.
ஆகவே, இந்த ஆதிபலியை ஏற்றுக்கொண்ட உங்களை ஒன்றும் சேதப்படுத்தாது. நான் சதா காலங்களிலும் ஜீவித்திருக்கிறேன். என்னை விசுவாசிப்பவர்களை இந்த பூலோக மக்கள் கொன்றாலும், உங்களை மரணத்திலோ அல்லது பாதாளத்திலோ தள்ள முடியாது. நீங்கள் எப்பொழுது ஆதிபலியை ஏற்றுக்கொள்கிறீர்களோ, அதன்பிறகு என்னால்தான் உங்களுடைய ஜீவனை எடுக்க முடியும். என்னால்தான் பரிசுத்த ஆவியைக் கொடுக்கவும் முடியும். சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் அந்த காணக்கூடாத கடவுளின் சாட்சிகளாக உள்ளன. அதை எடுக்கவும் முடியும். ஆகவே நீங்கள் பாவமற்றவர்களாகிறீர்கள்.
கோவில்களில் ஆடு மாடு பலி அவசியமா?
தமிழக அரசு கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளை பலியிடக்கூடாது என்றும் அவ்வாறு பலியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ள நிலையில் ஆடு, மாடு பலியிடுதல் அவசியமா என்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளது. நேர்த்திக் கடன் என்ற பெயரில் பாரம்பரியமாக தொன்றுதொட்டு இந்தக் காரியங்கள் கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதைத் தடுக்க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். ஆயினும் இந்த விஷயத்தில் அவர் நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டவில்லை. ஆனால் தற்போதுள்ள தமிழக அரசோ இதில் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்நிலையில் கோவில்களில் ஆடு, மாடு பலி அவசியமானதா என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஆதிகாலம் தொட்டே நமது புராணங்களின்படி யாகங்கள் அதாவது வேள்வித்தீ என்ற பெயரில் உயிரினங்களை பலியிட்டு உள்ளனர். அசுவமேதயாகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் குதிரைகள் பலியிடப்பட்டதாக அறிகிறோம். அதுபோல் சுடலைமாடன், முனியசாமி, ஐய்யனார் என்ற பெயரில் கோவில்களில் உள்ள சாமிகளுக்கு ஆடு, மாடு, கோழி, பன்றிகளை பலிகொடுத்து வந்துள்ளனர். ஏன், சில இடங்களில் காளிபோன்ற தேவதைகளுக்கு நரபலி (மனிதபலி) கொடுக்கப்பட்டும் வந்துள்ளது. இன்றும்கூட சில இடங்களில் இக்கொடுமைகள் நடப்பதுண்டு என்றும் சொல்லப்படுகிறது.
இந்து மதத்தில் சைவ சமயம் புலால் உண்ணுதல் கூடாது, அது கொடுஞ்செயல் என்று கூறி வருகிறது. சமணர்கள் எந்த உயிருக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்று சொன்னாலும் நடைமுறையில் கடைபிடிப்பதில்லை. பௌத்தமதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி தொடங்கப்பட்ட மதம். ஆனால் பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்கும் சீனர்கள் ஆடு, கோழி மட்டுமல்ல தவளையையும் பாம்பையும், ஏன், பூச்சி வகைகளையும்கூட உணவாகக் கொள்கின்றனர். சீனாவில் மாடு, பன்றி போன்ற மிருகங்களை அடித்துக் கொன்று அதிலிருந்து உருவாகும் ஒரு புழுவை விசேஷமான விருந்தாக சாப்பிடுவது வழக்கம். ஜப்பானியர்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். எனினும், மாமிச உணவு வகைகளை வெறுக்கவில்லை. இலங்கையில் வாழும் பௌத்தர்களும் ‘கொன்றால் பாவம் தின்றாரோடு, தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு புத்தரின் அஹிம்சா நெறியை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள்.
நமது நாட்டிலும் நாங்கள் சுத்த சைவம் என்று கூறிக்கொள்பவர்களில் சிலர் ‘வீட்டிலே சைவம், வெளியிலே அசைவம்’ என்று நடைமுறையில் கடைப்பிடித்து வருவோரும் உண்டு. மனிதனின் வியாபார சிந்தனைகளில், அவனது லாப வேட்கைக்காக உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 50 கோடிக்கு மேல் பூமியில் வாழும் உயிரினங்கள் மனிதனால் வேட்டையாடப்படுகிறது, அல்லது கொல்லப்படுகின்றன. கடல் வாழ் உயிரினங்களைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும். கடல்வாழ் உயிரினங்களில் மீன்களிலிருந்து திமிங்கிலங்கள் வரை மனிதனால் வேட்டையாடப்படுகின்றன. எறும்புகள் முதல் யானைகள் வரை எல்லாம் மனிதர்களின் சுய நலத்துக்கே பலியாகிறது.
இப்படி பலி செலுத்துவதினால் பொது மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படி பல்வேறு உயிர்கள் மனிதனால் பலியாக்கப்பட்டாலும் இவற்றில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள் தேவதைகளுக்குத்தான் அதிகமாகப் பலியிடப்படுகின்றன. முன்பெல்லாம் கசாப்பு வெட்டும் இடங்களில் ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றை சீல் இட்டுத்தான் விற்பனைக்கு அனுப்புவார்கள். இப்போது கசாப்புக் கடைகளில் அவர்கள் தெருக்களில் கடை முன்பே போட்டு அறுத்து விடுகிறார்கள். தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பிள்ளைகள் இக்கொடிய காட்சியைக் கண்டு மிரள்வதும் உண்டு. இன்னும் சில உள்ளங்களோ இதைப்பார்த்து வன்முறைக் குற்றங்களைச் செய்வதும் உண்டு. எனவே கடைகளில் முன்னே ஆடுகளை அறுப்பது நல்லதல்ல.
பரிசுத்த விவிலியத்தில்கூட ஆபேல் என்பவர் கடவுளுக்கு ஆடு பலியிட்டார் என்று அறிகிறோம். அவரது அண்ணன் காயீன் ஆடு பலியிட விரும்பாமல் காய்கறிகளைக் கொண்டுவந்து கடவுளுக்குப் பலியாக செலுத்தினார். ஆனால் கடவுள் அதை ஏற்கவில்லை. ஆனால் ஆபேல் கொடுத்த ஆட்டுப்பலியை ஏற்றுக்கொண்டால். அக்காலங்களில் வானிலிருந்து கடவுள் பட்சிக்கிற அக்கினியாக இறங்கிவந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக விவிலியத்தில் சான்று உள்ளது. ஆனால் இப்போதைய நடைமுறை அப்படியில்லை. இப்பொழுது கடவுள் என்ற பெயரில் ஆடு, மாடு பலியிட்டு அதை உற்றார் உறவினர்கள் புடைசூழ அமர்ந்து உணவாக்கி உண்டு மகிழ்கின்றனர்.
ஒருமுறை விவேகானந்தரிடம் ஒரு அந்தணர் இந்தியாவில் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதன்மூலம் மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றார். அப்போது மேற்கு வங்கத்தில் கடுமையான பஞ்சம், மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். விவேகானந்தர் அந்த அந்தணரிடம் சீறினார். மனிதனின் உயிர் போகிறது, இவர் மாட்டின் உயிரைப்பற்றி கவலைப்படுகிறாரே என்று அவரிடம் எரிந்து விழுந்தார். அப்போதும்கூட அந்த அந்தணர் அது அவர்களின் தலைவிதி முன்ஜென்ம வினை என்று பேசினார். அப்போது விவேகானந்தர் மனிதன் கொல்லப்பட்டால் முன் ஜென்ம வினை என்கிறீரே, அதுபோல் இந்த மாடுகள் கொல்லப்படுவதும் ஏன் முன்ஜென்ம வினையாக இருக்கக்கூடாது என்று கேள்வி கேட்டார். இஸ்ரவேல் மக்கள் பசு அல்லது காளையை பலியிட்டு பூஜை செய்துள்ளனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதே இதற்குத்தான். பக்ரீத் என்றாலே பலி என்றுதான் பொருள். குர்பானி என்றாலும் பலி என்றுதான் பொருள். இலங்கையில் உள்ள பிரபலமான முருகன் கோவில் கதிர்காமத்தில் உள்ளது. இந்த முருகன் கோவிலில் ஆடுகள் இன்றும் பலியிடப்படுகின்றன. இந்த பலி வழிபாடுகள் இந்துக்களின் எல்லா கோவில்களிலும் நடைபெறவில்லை என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரம்மா, சிவன், விஷ்ணு, விநாயகர், இராமர், கிருஷ்ணர், ஓம் சக்தி என்கிற பெயரில் கடவுளை வழிபட்டாலும் ஆடு, மாடு, கோழி இவைகளை பலியிட்டு வழிபடும் வழக்கம் காளி, சுடலைமாடன் முனியசாமி, கருப்பசாமி, அய்யனார் போன்ற தேவர்கள், தேவதைகளின் கோயில்களில் மட்டுமே செலுத்தப்படுகிறது. மெய்யான இறைவனுக்கு பலி செலுத்தும் வழக்கம் எப்பொழுதோ மறைந்துபோய் அதற்குப் பதிலாக ஓமகுண்டம் வளர்த்து யாகம் என்கிற பெயரால் நடத்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி என்று செலுத்தப்படுகிறது. அப்பமும் இரசமும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. எதை நினைவுகூர்ந்து இதைச் செய்கின்றனர்?
கிறிஸ்தவ கோவிலான புளியம்பட்டி அந்தோணியார் கோவிலிலும் ஆடுகள் பலியிடப்படுகின்றன. ஆடுகள் பலியிடப்படுவதை இயேசுவும் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் இதற்காகத்தான் இயேசு தனது இரத்தத்தைக் கொடுத்தார் என்னும் வாதமும் பொருத்தமானதல்ல. மிருகவதையைத் தடுப்பதற்காக சில சங்கங்களும் உண்டு. அவர்களும் அவ்வப்போது சில முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். சைவ சமய நெறியும் இதற்காகவே மக்களிடம் போதிக்கப்பட்டு வருகிறது. யூதர்கள் ஆரம்பத்தில் பஸ்கா பலி செலுத்தி வந்தனர். ஆடுகளை, காளைகளை பலியிட்டனர். இப்போது அதை நினைவுறுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்தை நினைவுகூர்ந்து பலிபூஜையில் அப்பமும், ரசமும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பலியைப் பற்றி
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தமது நித்திய ஜீவ வார்த்தையில் குறிப்பிட்டு இருப்பதாவது:- ‘கல்வாரியானது (பலி) கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உலக அஸ்திபாரத்தின்போது சம்பவித்தது என்று ஆதிபலி மக்கள் விசுவாசிக்க வேண்டும். அதுதான் உலக அஸ்திபார முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறது. அந்த சமயத்தில்தான் அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அவர் எல்லாவற்றையும் செய்தார். ஆபிரகாம் பலி செலுத்திய பொழுது (சீலோ) சமாதான கர்த்தர் – இறைவனாகிய ஆண்டவன் வந்து பேசுகிறார். பாவம், அவன்மேல் சுமத்தப்படவில்லை. மோசேயின் காலத்திற்குப் பிறகு அவர்கள் கன்றுக்குட்டியை வணங்கியபோது இறைவன் அவர்களை விட்டுவிட்டார். சபையாரின் ஆசரிப்புக்கூடாரம் வெளியிலிருந்தது, பாளையத்திற்குள் அல்ல. ஈசாக்கிற்குப் பிறகு மிருகங்களின் பலி நிறுத்தப்பட்டது. ‘ஒரு மிருகமும் கொல்லப்படக்கூடாது’ என்று அபிமெலேக்கு கட்டளையிட்டான். இயேசுவின் காலத்திற்குப் பிறகு மனித பலி நிறுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் மனித பலியை அகற்றிவிட்டார்கள். எனவேதான் பலிகளின்போது அவர்கள் நெய் ஊற்ற ஆரம்பித்தார்கள். அவர்கள் எந்த மிருகத்தையும் கொல்வதில்லை. பூலோக மக்களால் ‘ஆதிபலி’ மறைக்கப்பட்டது. ஆதிபலி அல்லது பிரம்ம யக்ஞத்தை சேர்ந்தவர்கள் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஆதிபலி என்றால் அர்த்தம் என்ன? நீங்கள் உங்களுடைய சகோதரனை நேசித்தால் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். பலி என்றால் கொல்வது என்று அர்த்தம் அல்ல. ‘நீங்கள் என்னை பலியிடுங்கள் அதனால் நீங்கள் விருத்தி அடைவீர்கள்’ என்று கடவுள் சொன்னபோது இவர்கள் அனைவரும் சுயமுள்ளவர்களாகிவிட்டனர்.’ அன்பு நெறியை நிலைநாட்டிய தீர்க்கதரிசி முத்துக்குட்டி அகிலத்திரட்டு நூலில்,
“ஆடு, கிடாய், கோழி,பன்றி
ஆயனுக்கு வேண்டாம்
ஒரு அன்பு மலரெடுத்து
அனுதினமும் பூசை செய்வாய்”
என்று பாடியுள்ளார். சன்மார்க்க சபைகள், சைவ நெறியாளர்கள், மிருகவதைத் தடுப்புச் சங்கத்தினர்கள் இவர்கள் இன்னும் வேகமாக செயல்பட அரசு இவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்போது கோவில்களில் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை பலியிடக்கூடாது என்கிற சட்டமானது வரப்போகும் தெய்வீக ஆட்சிக்கு முன்அடையாளமாக இருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி அடைவோமாக.